×

கொடநாடு விவகாரம் பொய் என்று நிரூபித்தால் 100 ஆண்டுகள் சிறையில் இருக்க தயார்: மேத்யூஸ் டெல்லியில் மீண்டும் பரபரப்பு பேட்டி

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் பொய் என்று நிரூபித்தால் 100 ஆண்டுகள் கூட சிறையில் இருக்க தயார் என்று தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் டெல்லியில் பரபரப்பு பேட்டி  அளித்துள்ளார்.கொடநாடு எஸ்டேட்டில் வேலை செய்த ஊழியர்கள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்  காரணம் என்று சந்தேகப்படுகிறேன். அதற்குரிய முழு ஆதாரங்களும் என்னிடம் உள்ளது என்று தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லி பிரஸ் கிளப்பில் திடுக்கிடும் பேட்டி அளித்தார். இதுதொடர்பாக ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட்டார். அதில் கொலை வழக்கு சம்பந்தமான அனைத்து ஆதாரங்களும் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து இந்திய வரலாற்றில் 5 பேர் கொலை வழக்கில் முதல் முறையாக ஒரு  மாநிலத்தின் முதல்வர் நேரடியாக தொடர்பில் இருந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை பதவி விலகக்கோரி வருகின்றனர்.

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை அல்லது சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியில் இருக்கக்கூடிய நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றுமுன்தினம் நிருபர்களை சந்தித்தார். அப்போது கொடநாடு கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது; ஆவணப் படங்களையும் வதந்திகளையும்  வெளியிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சென்னை குற்றவியல் போலீசார் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்ட தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு  செய்தனர். இந்நிலையில் அவரை கைது செய்ய துணை கமிஷனர் செந்தில் குமார் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று டெல்லி விரைந்தது. இந்நிலையில் தெகல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் டெல்லியில்  நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது: கொடநாடு எஸ்டேட் கொலை தொடர்பான வீடியோ குறித்த விசாரணைக்கு, நான் தயாராக இருக்கிறேன். தமிழக போலீசாரின் எந்த ஒரு விசாரணையாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள தயார். என்னை விசாரிக்கவோ அல்லது  கைது செய்யவோ யாரும் எனது வீட்டிற்கு இதுவரை வரவில்லை. ஒருவேளை வரும்பட்சத்தில் ஆதாரங்களுடன் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக உள்ளேன். மேலும் எடப்பாடி பழனிசாமி மீதான எனது குற்றச்சாட்டில்  இருந்து, நான் பின்வாங்கப்போவதில்லை. அவர் தான் கொலைக்குற்றவாளி.

என்னுடைய புலன்விசாரணை உண்மையான ஒன்று. கொடநாடு எஸ்டேட்டில் 5 பேர் கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தவறு செய்துவிட்டு தப்பிவிட முடியாது. கண்டிப்பாக அடுத்த பொங்கலுக்கு அவர் சிறையில்  தான் இருப்பார். என்னுடைய பத்திரிகை தொழில் அனுபவத்தில் நான் கூறுகிறேன். என்னுடைய புலன்விசாரணை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, அதில் உண்மையும் உள்ளது. இதில் யாருடைய நிழலின் கீழும் இருந்துகொண்டு,  இத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை.இதுபோன்ற புலன் விசாரணையை கூறுவதால், அரசியல் கட்சிகள் சார்ந்து நான் செயல்படுவதாக பலர் சித்தரிக்கின்றனர், அது உண்மை அல்ல. அதற்கு உதாரணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்பான  வழக்கில், நான் ஒரு விசாரணை ஆதாரத்தை வெளியிட்டேன். அப்போது பாஜகவின் கைக்கூலி என்று என்னை விமர்சித்தார்கள். அதன்பின் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அதே போல் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை  வழக்கில் உண்மை விரைவில் தெரியவரும். இவ்வாறு மேத்யூஸ் கூறினார்.

‘2 பேரையும் எடப்பாடி பழனிசாமி கடத்தினார்’
கொடநாடு கொலை வழக்கு விவகாரத்தில் தொடர்புடைய சயன், மனோஜை தனிப்படை போலீசார் கைது செய்த 10 நிமிடங்கள் கழித்து பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோவில்  கூறியிருப்பதாவது: சயன் மற்றும் மனோஜ் உள்ளிட்டோருடன் பேசிவிட்டு நான் அங்கிருந்து கிளம்பினேன். அப்போது அந்த இடத்திற்கு தனியார் வாகனம் ஒன்று வந்தது. அதில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த வாகனத்தில்  இருந்தவர்கள் சயன் மற்றும் மனோஜ் ஆகியோரை கட்டாயப்படுத்தி கடத்தி சென்றனர். அவர்களை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கவே கடத்தி செல்கின்றனர் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். எப்படி இவர்களை  கடத்தி செல்லலாம், இதை மிக முக்கிய விவகாரமாக எடுத்து நாம் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார்
வழக்கின் 2வது குற்றவாளியான சயான் கூறுகையில், ‘‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது. அதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. இந்த  விவாகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராக இருக்கிறேன். இதுவரை தமிழக போலீசாரிடம் இருந்து, எந்த தகவலோ, தொலைபேசி அழைப்போ வரவில்லை. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இருப்பினும் நீதிமன்ற விசாரணை என்பது சரியாக தான் சென்று கொண்டிருக்கிறது. அதில் குறைகூற நான் விரும்பவில்ைல. இதில் அப்ரூவராக  கூட மாற தயாராக இருக்கிறேன். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் கீழ் இயங்கும் போலீசில் அல்ல, மத்திய அரசின் கீழ் இயங்கும் எந்த ஒரு புலனாய்வு அமைப்பிடமும் நேரடியாக ஆஜராகி அப்ரூவராக தயாராக உள்ளேன்’  என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodadadu ,jail ,Delhi ,Matthews , Kodanad issue , 100 Years, Imprisoned,Matthews
× RELATED இடைக்கால ஜாமின் பெற்ற கெஜ்ரிவால்...